இலங்கை
வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை

வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை
பருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்லவில்லை.
தேவாலயத்தில் இருந்து சகோதரி காலை 9 மணியளவில் வீடு திரும்பியபோது குணதேவி வீட்டின் சமையலறையில் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
சம்பவம் அறிந்து அயலவர்கள் கூடியநிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் குணதேவியை சமையலறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். அம்புலன்ஸுக்கு அறிவித்திருந்தநிலையில், அம்புலன்ஸில் வந்த உத்தியோகத்தர் குணதேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வீட்டில் முன்னர் ஆள்கள் இல்லாதபோது கைத்தொலைபேசி ஒன்று திருடப்பட்டிருந்தது என்பதும், இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது.
அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை இனங்கண்டனர். அந்த நபர் தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முதலில் மறுத்தாலும் பின்னர் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் திருடுவதற்காக சந்தேகநபர் சுவர் ஏறிக்குதித்துச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சமையலறையில் மூதாட்டியைக் கண்டதும், அங்கிருந்த ரீப்பை கட்டை ஒன்றால் மூதாட்டியைத் தாக்கி விட்டுச் தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அதனால் புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்றும், இவர் மீது ஏற்பகவே பல்வேறு திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.