இலங்கை
கண்டியில் உருவாகும் விசேட வாக்களிப்பு நிலையம்

கண்டியில் உருவாகும் விசேட வாக்களிப்பு நிலையம்
ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் வாக்கு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு தற்போது சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தபால் மூல வாக்களிக்க வசதி செய்யப்படவுள்ளது.
கண்டி உயர்நிலைப் பெண்கள் பாடசாலையில் ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில், தலதா வழிபாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள தபால் மூல வாக்குள்ள பொலிஸ் அதிகாரிகளின் வாக்கு பதிவு நடைபெறும்.
இதற்காக விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் அதிகாரிகளுக்கு அவர்களின் வாக்கை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
இது தொடர்பான வழிகாட்டல்கள் பொலிஸ் மா அதிபருக்கும், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க 648,495 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான தபால் வாக்கு அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால் வாக்கு பதிவு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.