இலங்கை
ரணிலால் திணறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ; சாமர சம்பத் எம்பி மீதான விசாரணை நிறுத்தம்

ரணிலால் திணறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ; சாமர சம்பத் எம்பி மீதான விசாரணை நிறுத்தம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்த காலத்தில்,செய்யப்பட்ட நிதிமுறைகேடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.
அந்த சம்பவம் தான் பிரதமராக இருந்த காலத்தில் நடந்தது என்றும், சாமர சம்பத் தசநாயக்க அதற்குரிய பணத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் திறைசேரி செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படியே பெற்றுக் கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மாகாண சபை நிதியை நிலையான வைப்பு கணக்குகளில் வைக்க முடியாது என்றும், அரசாங்க நிதி மற்றும் ஒதுக்கப்பட்ட பிற நிதி அனைத்தும் ஒரே ஆண்டில் செலவழிக்கப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறு செய்யாவிட்டால் அந்த நிதி நிதி அமைச்சகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாகாண சபை அமைச்சகத்திற்கோ திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் விக்ரமசிங்க அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி அறிக்கை ஒன்றை வழங்குமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தும், அன்று அறிக்கை வழங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வர முடியாது என்று விக்ரமசிங்க பதிலளித்திருந்தார்.
இதனால் அந்த அறிக்கையை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வேறொரு திகதி வழங்கப்படவுள்ளது.