இந்தியா
செல்போனுக்கு மெசேஜ் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவம்: புதுச்சேரியில் புது திட்டம்

செல்போனுக்கு மெசேஜ் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவம்: புதுச்சேரியில் புது திட்டம்
புதுச்சேரியில் கால்நடை வளர்ப்பவர்களின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி, அதன் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் வசதி கால்நடை துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மங்களம் தொகுதி திருக்காஞ்சி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு, நலத்துறை மற்றும் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கால்நடை நலத்துறை செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.அப்போது அமைச்சர் பேசுகையில், உறுவையாறு திருக்காஞ்சி ஆகிய பகுதிகளில், கால்நடை மருத்துவர்கள் சரிவர வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே வாரம் இருமுறை, நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வரும். இதுகுறித்து முன்கூட்டியே கால்நடை வளர்ப்பவர்களுக்கு அவரது செல்போனுக்கு மெசேஜ் வரும். அதன் மூலம் கால்நடை விவசாயிகள் வந்து தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்குவதற்காக புதிதாக 25 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என கூறியுள்ளார்.முகாமில் 326 கால்நடைகள் 50 கோழிகள் 56 நாய்கள் பங்கு பெற்றது. அவற்றுக்கு குடற்புழு மருந்துகள் வெறி நோய் தடுப்பூசிகள் மலட்டு தன்மை நீக்க சிகிச்சைகள் மற்றும் நோயுற்ற மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கால்நடை விவசாயிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், கால்நடை மருத்துவ கல்லூரி டீன் செழியன், இணை இயக்குனர் குமரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர்கள் மோகன் மற்றும் ஆனந்தராமன் செய்து இருந்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன்