இந்தியா
Chennai Rains: 10 செ.மீ மழை.. கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.. தீவிர கண்காணிப்பில் நீர்வளத்துறை!

Chennai Rains: 10 செ.மீ மழை.. கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.. தீவிர கண்காணிப்பில் நீர்வளத்துறை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த 10 செ.மீ மழைப்பொழிவினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செம்பரம்பாக்கம் ஏரியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரிக்கு வரும் நீரின் அளவு, தற்போது ஏரியில் உள்ள நீரின் அளவை கேட்டறிந்த அவர், ஏரிக்கு வரும் நீரின் அளவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 19.47 அடியாக உள்ளது. மொத்தம் நீரின் அளவு 3.645 டிஎம்சியில் தற்போது 2.474 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்வரத்து 5,356 கன அடியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.
நீர்மட்டம் தற்போது 19.47 அடியை நெருங்கிய நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் 22 அடி வரை கண்காணித்து மழையைப் பொறுத்து உபரி நீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீர்வரத்து வந்தால் இன்று இரவுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20 அடியை எட்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் காரணமாக, இன்று (30.11.2024) காலை முதல் பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில், மாலை 4 மணி நிலவரப்படி 19.31 அடி உயரம் நிரம்பி, அதன் முழு கொள்ளளவான 3645 Mcft-ல் தற்பொழுது 67% ஆன 2436 Mcft நிரம்பியுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், 5 நீர்த்தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11.76 டிஎம்சி-இல் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.