பொழுதுபோக்கு
‘குட் பேட் அக்லி’ தந்த உற்சாகம்: தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியா வாரியர்

‘குட் பேட் அக்லி’ தந்த உற்சாகம்: தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியா வாரியர்
சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தமிழக ரசிகர்கள் அளித்த பேராதரவால் நடிகை பிரியா வாரியர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அவர் கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரியா வாரியர், தனது கல்லூரி காலத்தில் விழாக்களில் பங்கேற்க முடியாத வருத்தம் தனக்கு இருந்ததாகவும், தற்போது இந்த விழாவில் கலந்துகொள்வதன் மூலம் அந்த குறை நீங்கியதாகவும் கூறினார்.மேலும், தல அஜித் குமார் தனது ஆல் டைம் பேவரைட் ஹீரோ என்றும், அவருடைய படத்தில் நடித்தது தனக்குப் பெருமையான தருணம் என்றும் குறிப்பிட்டார்.’குட் பேட் அக்லி’ படக்குழுவினர் அனைவரும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் தனக்கு பரிச்சயமானதால் எந்தவிதமான மொழி வித்தியாசத்தையும் உணரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ் மொழி தனக்கு மிகவும் பிடித்தமானது என்று அவர் கூறினார். சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், தமிழக மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு உண்மையிலேயே எதிர்பாராதது மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.தொடர்ந்து பேசிய பிரியா வாரியர், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், விரைவில் பல நல்ல படங்களில் நடிக்கவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.