விளையாட்டு
இந்தியா-பாக்., போர் பதற்றம்: ஐ.பி.எல். 2025 தொடர் ஒரு வாரம் நிறுத்திவைப்பு

இந்தியா-பாக்., போர் பதற்றம்: ஐ.பி.எல். 2025 தொடர் ஒரு வாரம் நிறுத்திவைப்பு
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் ஒருவாரம் நிறுத்தி வைக்க பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளது. புதிய அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த மேலும் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து நிலைமையை முழுமையாக சரியான பின் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிசிசிஐயின் கௌரவ செயலாளர் தேவஜித் சைகியா விடுத்துள்ள அறிக்கையில், பெரும்பாலான அணி உரிமையாளர்களின் வேண்டுகோள்கள், அவர்களின் வீரர்களின் பாதுகாப்பு கவலைகள், உணர்வுகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகள் ஆகியவற்றை உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. நமது ஆயுதப்படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருந்தாலும், அனைத்து உரிமையாளர்களின் கூட்டு நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது விவேகமானது என்று பிசிசிஐ கருதுகிறது.இந்த முக்கியமான தருணத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, நமது ஆயுதப் படைகள் மற்றும் நாட்டு மக்களுக்கு எங்களது ஒற்றுமையை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின் கீழ் நமது ஆயுதப் படைகளின் வீரத்தையும், தைரியத்தையும், தன்னலமற்ற சேவையையும் பிசிசிஐ பாராட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு, இந்திய ராணுவத்தினர் உறுதியான பதிலடியைக் கொடுத்து தேசத்தைப் பாதுகாத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.கிரிக்கெட் ஒரு பேஷனாக இருந்தாலும், தேசமும் அதன் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பும் எல்லாவற்றையும் விட பெரியது. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பிசிசிஐ உறுதுணையாக இருக்கும் என்பதையும், தேசத்தின் நலனுக்கு உகந்த முடிவுகளையே எப்போதும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த முடிவுக்கு தங்களது புரிதலையும், அசைக்க முடியாத ஆதரவையும் அளித்த ஒளிபரப்பு கூட்டாளர் ஜியோஸ்டாருக்கு பிசிசிஐ நன்றி தெரிவிக்கிறது. தேசிய நலனுக்கு முதலிடம் கொடுத்து இந்த முடிவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்கிய டைட்டில் ஸ்பான்சர் டாடா மற்றும் அனைத்து அசோசியேட் பார்ட்னர்கள் மற்றும் அணி உரிமையாளர்கள், மற்ற வாரியம் நன்றியுள்ளவனாக இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.