உலகம்
பலஸ்தீனா்களை நாடுகடத்தும் சட்டம்!

பலஸ்தீனா்களை நாடுகடத்தும் சட்டம்!
தங்கள் பகுதிகளில் வசிக்கும் ‘பயங்கரவாதிகளின்’ குடும்ப உறுப்பினா்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட அவா்களை நாடு கடத்த அதிகாரம் வழங்கும் இந்த சட்ட மசோதா, பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அதன் தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்டது.
அந்த மசோதாவுக்கு ஆதரவாக 61 வாக்குகளும் மசோதாவை எதிா்த்து 41 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்தச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது இஸ்ரேலிய அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டம் என்பதால் நீதிமன்றம் அதை ரத்து செய்வதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
அந்த மசோதாவில், இஸ்ரேலிலும் இணைத்துக் கொள்ளப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியிலும் வசிக்கும் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பலஸ்தீனா்களில் யாருக்காவது அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் நடத்தும் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவா்களை நாடுகடத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியாவிட்டாலும்கூட, அந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை குடும்ப உறுப்பினா்கள் கொண்டிருந்தால் அவா்களையும் இந்த புதிய சட்டத்தின்கீழ் காஸா பகுதிக்கோ, பிற பகுதிகளுக்கோ ஏழு முதல் 20 ஆண்டுகள் வரை நாடுகடத்த முடியும்.
இருந்தாலும், இந்தச் சட்டம் மேற்குக் கரை பகுதிக்கும் பொருந்துமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஏற்கனவே, இந்தப் பகுதியிலிருந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தும் போராளிகளின் வீடுகளை தரைமட்டமாக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டதை சா்வதேச நாடுகள் இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனவே, அந்தப்பகுதியில் வசிப்பவா்களை நாடு கடத்தும் உரிமையும் இஸ்ரேலுக்கு சட்டரீதியில் இல்லை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் மக்கள்தொகையில் சுமாா் 20 சதவீதத்தினா் பாலஸ்தீனா்கள். அவா்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் அளிக்கப்பட்டிருந்தாலும், அவா்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஏராளமான இஸ்ரேலிய-பலஸ்தீனா்களின் குடும்பங்கள் காஸா உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பதால், அவா்கள் பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்தச் சட்டம் இஸ்ரேலிய-பலஸ்தீனா்களை மேலும் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் என்று அஞ்சப்படுகிறது.