பொழுதுபோக்கு
ரஜினிக்கு கதை சொல்ல காத்திருக்கிறேன்… அடுத்த மூவி அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிக்கு கதை சொல்ல காத்திருக்கிறேன்… அடுத்த மூவி அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரெட்ரோ படத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பட குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், கோவை பிராட்வே திரையரங்கில் எபிக் தொழில்நுட்ப முறையில் ஒலி ஒளி அமைப்பு சிறப்பாக இருப்பதாகவும் இங்கு வந்து தனது ரெட்ரோ திரைப்படத்தை பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். சூர்யா ஒரு மிகச்சிறந்த நடிகர் என்றும் இந்த படத்தில் நடித்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இரண்டாவது வாரமாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறியதுடன், இளைஞர்கள் முதல் குடும்பத்தினர் வரை அனைவருக்கும் இந்த படம் பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.மேலும் படத்தின் கதையைக் கேட்டவுடன் சூர்யா அதில் நடிக்க சம்மதித்ததாகவும் பேட்டை படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் ஒரு கதை சொல்ல வேண்டும் அந்த கதை அவருக்கு பிடித்து விடும் பட்சத்தில் மீண்டும் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்குவேன் என்றும் குறிப்பிட்டார்.மேலும் இந்த படத்தில் 15 நிமிட காட்சி ஒன்றை படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து மிகுந்த சவாலுடன் படம் பிடித்ததாகவும் அந்தமான் சென்று படப்பிடிப்பு நடத்தியபொழுது அது ஒரு சவாலான அனுபவம் என்றும் சண்டைக் காட்சிகளுக்காக தாய்லாந்தில் இருந்து ஒரு சண்டை பயிற்சியாளரை அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியது தனக்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாகி இன்று 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்று ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் பெரு மகிழ்ச்சி என்றும் கூறினார்.தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் இரு வாரங்கள் திரையரங்குகளில் ரெட்ரோ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் பல வாரங்கள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட வேண்டும் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்