
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 12/05/2025 | Edited on 12/05/2025

கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கூடுதலாக கதை எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க ‘கருடன்’ படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. முதல் பாடலான ‘கல்லாளியே கல்லாளியே’ பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது.
இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சூரி பல்வேறு கல்லூரிகளுக்கும் நிறைய மாவட்டங்களுக்கும் சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூரில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. பின்பு மேடையில் பேசிய அவர், “நான் சென்னையில் பல வேலைகள் செஞ்சு, கஷ்டப்பட்டு பின்பு கதையின் நாயகனா நடிச்சு இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கேன். திருப்பூரில் இந்த இடத்தில் என் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடப்பது…” என பேசிக்கொண்டிருந்த சூரி திடீரென கையெடுத்து கும்பிட்டு எமோஷனலாகி நன்றி தெரிவித்தார்.
பின்பு கண்கலங்கிய படியே பேசிய அவர், “இதை விட வேறு எதுவுமே எனக்கு தேவையில்லை. நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த இடத்தில் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க. இதை விட மரியாதை வேறு எங்கையும் எனக்கு கிடைக்காது. உள்ளே நுழைஞ்சு வரும் போது எனக்கு நீங்க சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தது போல இருந்துச்சு. நானா இந்த இடத்துக்கு வரல. நீங்க எல்லாம் கைதட்டி விசில் அடிச்சு என்னை இந்த இடத்துக்கு கூட்டி விட்டிருக்கீங்க. நீ நில்லுடா… இது உனக்கான மேடை, நீ நிக்காம யார் நிக்க போறா, உனக்காக நாங்க இருக்கோம்னு சொன்னது போல இருந்தது” என்றார்.