இந்தியா
என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து தான் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து தான் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
மாநில அந்தஸ்தே பெறுவதே முக்கிய கோரிக்கையாகும். இதை நான் மத்திய அரசிடம் வலியுறுத்தி கொண்டே இருப்பேன் என்று புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது; ”சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இன்று மாலை 3 மணி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் தொழிற்படிப்புகள் 6,257, கலை அறிவியல் படிப்புகள் 4320 என மொத்தம் 10,577 இடங்கள் உள்ளன.புதுவை அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விரைவில் வழங்கப்படும். புதுவைக்கு வருகை தந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் மாநிலத்திற்கு தேவையான நிதி, நிர்வாகம் தொடர்பாக அறிவுறுத்தி உள்ளோம்.என்.ஆர்.காங்கிரஸ் கொள்கையே மாநில அந்தஸ்து தான். எனவே மாநில அந்தஸ்தே பெறுவதே முக்கிய கோரிக்கையாகும். அனைத்து கட்சிகளின் கோரிக்கையும் மாநில அந்தஸ்து வேண்டும் என்பது தான். சட்டசபையில் மாநில அந்தஸ்து குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம். நிச்சயம் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.பாபு ராஜேந்திரன், புதுச்சேரி