இலங்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் காணிகள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் காணிகள்!
பெருந்தோட்ட அமைச்சர் அறிவிப்பு
பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி, காணிகளும் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்ததாவது:
பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு நிச்சயம் வழங்கப்படும். வரவு – செலவு திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர உறுதியளித்திருக்கின்றார். இந்த சம்பள அதிகரிப்பை விரைவில் வழங்குவோம் என்று உறுதியளிக்கின்றோம்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனவே அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மாத்திரமல்ல, பல அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.
ஏராளமான மக்கள் சொந்தக் காணிகள் இல்லாமலும் சொந்த வீடுகள் இல்லாமலும் வாழ்கின்றனர். எனவே, இந்த வருடத்தில் பெருந்தோட்ட மக்களுக்காக 6 ஆயிரம் வீடுகளை அமைப்போம் – என்றார்.