நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கிசா 47’(Kissa 47) சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. பாடலின் முதல் வரிகள், ‘ஸ்ரீனிவாசா கோவிந்தா… ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா…’ என ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் படி இருப்பதாக சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர்கள் சார்பில் சேலத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

புகார் குறித்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானத்திடன் கேள்வி எழுப்பும் போது, சந்தானம் புகாரை மறுத்திருந்தார். மேலும் நான் பெருமாள் பக்தன், கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன் என விளக்கமளித்திருந்தார். இருப்பினும் பட படத்தின் தயாரிப்பாளர் மீது ஜனசேனா கட்சியினர் ஆந்திரா திருமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் சர்ச்சையான பாடலை படத்தில் இருந்து நீக்கவும் படத்தை வெளியிட தடை செய்யவும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Advertisement

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி படத் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும் சந்தானத்துக்கும் பாடல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில், “இந்துக்களின் நம்பிக்கையையும் ஏழுமலையான் திருநாமங்களையும் இழிவுபடுத்தும் விதமாக அந்த பாடல் அமைந்துள்ளது. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும், அப்படி நீக்கா விட்டால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்கும் நிலை ஏற்படும். அதோடு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவும் கேட்கவில்லை என்றால், உங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.