இந்தியா
Fengal Cyclone | புதுவை, விழுப்புரத்தில் பெருமழை..! கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்..

Fengal Cyclone | புதுவை, விழுப்புரத்தில் பெருமழை..! கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடதமிழ்நாட்டை நோக்கி மிகவும் மெதுவாக நகர்ந்தது. மேலும், இது புயலாக மாறுமா, மாறாதா என கணிப்பதே வானிலை மையத்திற்கு சவாலான காரியமாக இருந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் ஃபெஞ்சல் புயல் உருவானதாக அறிவிக்கப்பட்டது. இது கடலிலேயே வலுவிழந்து கரையைக் கடக்கும் என முன்பு கூறப்பட்ட நிலையில், பின்னர் புயலாகவே கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை 5:30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல், 6 மணி நேரம் கழித்து, இரவு 11:30 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்ததாகவும், புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரும் ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் கரையைக் கடந்த போது, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரங்கள் பேயாட்டம் ஆடின. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து இரவு 12 மணி வரையில் 36.3 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 38 செ.மீ மழையும் பெய்துள்ளது.