நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இளையராஜா இசையில் யு. அன்புவின் இயக்கத்தில் ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோவுடன் வெளியானது. அந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்திலிருந்து சண்முக பாண்டியனின் பிறந்தநாளான கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி வாழ்த்து வீடியோ வெளியாகியிருந்தது.  

இதையடுத்து இப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாவதாக அறிவித்து பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்பு படத்தின் முதல் பாடலான ‘உன் முகத்த பாக்கலையே…’ லிரிக் வீடியோவுடன் கட்ந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இளையராஜா வரிகளில் அநன்யா பட் இப்பாடலை பாடியிருந்தார். இதையடுத்து படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை பழங்குடியின மக்களின் வாழ்வியலை பின்னனியாகக் கொண்டு ஆக்‌ஷன், எமோஷன் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிந்தது. ட்ரைலரின் இறுதியில் விஜயகாந்த் முகம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரின் பிரபல பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்…’ பாடல் பின்னணியில் ஒலித்திருந்தது. இதனால் இப்படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. 

Advertisement

இதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினருடன் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஏ.ஆர்.முருகதாஸ், பேசுகையில் விஜயகாந்த் செய்த உதவிற்காக இப்படத்தை நாம் வெற்றியாக்க வேண்டும். பின்பு சண்முக பாண்டியன் குறித்து பேசுகையில், “அவர் கட்டுமஸ்தாக இருக்கிறார். அவரை பார்க்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது, எப்படி இவருக்கு கட்டவுட் வைப்பாங்க, இவரே கட்டவுட் மாதிரி இருக்காருன்னு ஆச்சரியப்படுறேன். இவ்வளவு பெரிய கம்பீரமான கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வளர்ந்து வாங்க. ரமணா 2 எடுப்போம். திருப்பியும் விஜயகாந்தை காட்டுவோம்” என்றார்.