நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 01/12/2024 | Edited on 01/12/2024

கானா பாடகி இசைவாணி, ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற தலைப்பில் ஒரு பாடல் பாடியிருந்தார். இந்தப் பாடல் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் சார்பில் வெளியிட்டது. கேரளா சபரிமலையில் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் நடைபெற்று வரும் நிலையில், இந்த பாடல் தற்போது சர்ச்சையானது. இந்தப் பாடலை எதிர்த்து பா.ஜ.க.வினர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஐயப்பனுக்காக மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த பாடல் இருப்பதால் பாடகி இசைவாணி மற்றும் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனிடையே நீலம் பண்பாட்டு மையம், இந்த விவகாரம் தொடர்பாக, “அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்புகிறது ஒரு குழு. அவர்கள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறர்கள்” என அறிக்கை வெளியிட்டது. 

Advertisement

இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையாக மாற இசைவாணிக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இசைவாணிக்கு ஆதரவாக பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கர் இசைவாணிக்கு எதிராகப் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “இசைவாணி பாடியிருந்த ஐயம் ஸாரி ஐயப்பா பாடலை சமீபத்தில் கேட்டேன். சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்புக் கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம். ஒரே ஒரு குறை, பாடல் தெளிவாகக் கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம். இது போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு, விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கும் ‘பூசை’ சிறப்பாக நடக்கும்.

நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கிச் செல்வதை கண்டிருக்கிறேன். அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம். பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு ‘பரிசளிப்பார்கள்’ அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை ‘நிந்தா ஸ்துதி’யாக ஏற்றுக்கொள்வார். அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! ‘ஐயம் ஸாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா.

எந்த இறைவனை தொழுதாலும் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருப்பதே உண்மையான ஆன்மிகம், பக்தி. தனக்கு தீங்கு செய்தவரை அந்த விநாடியே மன்னித்தவர் நபிகள் நாயகம். சிலுவையில் அறைந்து விலாவில் ஈட்டியால் குத்திய போதும் ‘பிதாவே… இவர்கள் அறியாமல் செய்யும் பிழையை மன்னிப்பீராக’ என்று வேண்டியவர் இயேசு பிரான். மற்ற கடவுளர்களை வசை பாடும்படியோ, மற்ற மதத்தினர் மனதை புண்படுத்துமாறோ எந்த மகான்களும் சொல்லவில்லை. இறைவா… இவர்கள் அறியாமல் செய்யும் பிழைகளைக் கருணை கூர்ந்து மன்னித்து அமைதியும், சமாதானமும் நிலவச்செய்வீராக” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement