
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 17/05/2025 | Edited on 17/05/2025

நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் யோகி பாபு மீண்டும் கதாநாயகனாக நடித்து களம் இறங்கி இருக்கும் திரைப்படம் ‘ஜோரா கையை தட்டுங்க’. இந்த படத்தில் வித்தியாசமாக மேஜிக் ஷோ நடத்தும் மேஜிசியனாக நடித்திருக்கும் யோகி பாபு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த முயற்சி அவருக்கு கை கொடுத்ததா, இல்லையா?
மேஜிக் நிபுணரான தன் அப்பாவிடம் இருந்து அரைகுறையாக மேஜிக் வித்தைகளை கற்றுக்கொண்டு மேஜிக் ஷோ நடத்தி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் யோகி பாபு ஒரு மேஜிக் ஷோ செய்யும் பொழுது சிறுமிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இதனால் மேஜிக் ஷோ ரசிக்க வந்த ரசிகர்களிடம் தர்ம அடி வாங்கிக் கொண்டு தொடர்ந்து மேஜிக் ஷோவை பல இடங்களில் நடத்தி வருகிறார். இதற்கிடையே யோகி பாபுவை சிலர் அவரது வீட்டின் பக்கத்தில் இருந்து கொண்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்துகின்றனர். இதனால் அவர் அவமானத்தில் மிகவும் கூனிக்குறுகிப் போய் நடைபிணமாக வாழ்கிறார். இந்த நிலையில் அவர் மேஜிக் ஷோ நடத்திக் கொண்டிருக்கும் ஊரில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். இதனால் கொதித்துப் போகும் யோகி பாபு தனது அரைகுறை மேஜிக் வித்தைகள் மூலம் தன்னை அவமானப்படுத்தியவர்களையும், அந்த கொலை செய்தவர்களையும் கண்டுபிடித்து மர்மமான முறையில் தண்டிக்கிறார். இதனால் போலீஸ் யோகி பாபுவிற்கு வலை வீசுகிறது. கொலைகாரர்களிடமிருந்தும், போலீஸிடம் இருந்தும் யோகி பாபு தப்பித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் இது யோகி பாபுவுக்கு வித்தியாசமான கதையாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் ஏனோ பல இடங்களில் சுவாரஸ்யம் குறைவாகவும் தடுமாற்றங்கள் நிறைந்ததாகவும் இருப்பது ரசிகர்களை படத்துடன் ஒன்றை வைக்க மறுத்துள்ளது. மலையாள இயக்குநர் வினிஷ் மில்லினியம் கதை தேர்வை சரியாக செய்திருந்தாலும் திரைக்கதையில் சற்றே தடுமாறி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் யோகி பாபு ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் அவரது இன்னசென்டான நடிப்பும் படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து இருக்கிறது. யோகி பாபு படத்தின் முக்கிய பலமாகவும் இருக்கிறார். அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் நாயகன் யோகி பாபு மற்ற படங்களில் நடிப்பது போல் காமெடி பாத்திரம் ஏற்காமல் இந்த படத்தில் ஒன்றுமறியாத வெகுளிதனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து விட்டு போக போக விஸ்வரூபம் எடுக்கிறார். படத்தில் வழக்கமான நாயகியாக வரும் சாந்திராவ் வழக்கமான நடிப்பை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார். போலீஸாக வரும் ஹரிஷ் பேரோடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் அருவி பாலா, ஜாகிர் அலி ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
மது அம்பட் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு நிறைவாக வந்திருக்கிறது. அருணகிரி இசையில் மெலடி பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜித்தின் ரோஷன் பின்னணி இசை சுமார். யோகி பாபு படம் என்றாலே அது ஒரு காமெடி படமாக தான் இருக்கும் அல்லது மண்டேலா போல் ஒரு சீரியஸ் படமாக இருக்கும் என்ற நோக்கத்துடன் செல்லும் ரசிகர்களுக்கு இது ஒரு ஹாரர் திரில்லர் படமாக அமைந்திருப்பது சற்றே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அதையும் இயக்குநர் இன்னும் சரியாக செய்திருந்தால் இந்த படம் கவனம் பெற்று இருக்கும்.
ஜோரா கைய தட்டுங்க – சத்தம் குறைவு!