வணிகம்
ரிஸ்க் இல்லாத முதலீடு; 7.1% வட்டி கிடைக்கும் அரசு திட்டம்: இதை நோட் பண்ணுங்க மக்களே

ரிஸ்க் இல்லாத முதலீடு; 7.1% வட்டி கிடைக்கும் அரசு திட்டம்: இதை நோட் பண்ணுங்க மக்களே
நீண்ட காலம் முதலீடு செய்து வருங்காலத்தில் நிதி தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற திட்டம் பலருக்கு இருக்கும். குறிப்பாக, தங்களது பணம் 100 சதவீதம் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதிலும் குறிக்கோளாக இருப்பார்கள்.இது மட்டுமின்றி எந்த விதமான முதலீடு அபாயமும் இருக்கக் கூடாது என்றும் நினைப்பார்கள். இந்த அனைத்து காரணிகளுக்கும் ஏற்ற வகையில் அரசு சார்பாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்). இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ரூ. 500-ல் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ள முடியும்.பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டி இருக்கும். மேலும், அரசு சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதில் நிதி அபாயங்கள் கிடையாது. இத்திட்டத்தை நம் வீட்டு அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் தொடங்க முடியும்.நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கோர முடியும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், முதலீடு மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கிறது. உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ. 1.5 லட்சத்தை ஆண்டுக்கு முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ. 40,68,209 கிடைக்கும்.இதன் மூலம் நம்முடைய நிதி பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நம் குழந்தைகளின் எதிர்கால தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.