இலங்கை
உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய அதிகாரி

உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய அதிகாரி
இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சவீன் செமகே, பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி , பொது சுகாதார வைத்திய நிபுணரான சவீன் செமகே சனிக்கிழமை (மே 17) முதல் தனது பதவிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அடையாளம் தெரியாத இரண்டு பேர் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை, அவரது வீட்டை சுற்றி நோட்டமிடுவது, வீட்டின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அதோடு அவர்கள் செமகே உறங்கிக்கொண்டிருந்த படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த இருவரையும் பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படும் நிலையிலேயே அவர் பதிவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக வைத்தியர் சவீன் செமகே பணியாற்றியுள்ளார்.
இதனை அடுத்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவியை இராஜினாமா செய்தார்.
மருந்து கொள்வனவு கொள்முதல் முறைகேடுகள் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்லா இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ரமேஷ் பத்திரண, மருந்து ஒழுங்குமுறை பொறிமுறையை ஒழுங்குப்படுத்த சவீன் செமகேவை மீண்டும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு கொண்டு வந்தார்.
அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சவீன் செமகே தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.