இலங்கை
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முடிவுறுத்தப் பிரான்ஸ் தயார்

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முடிவுறுத்தப் பிரான்ஸ் தயார்
அந்த நாட்டுத் தூதுவர் தெரிவிப்பு
இலங்கைக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான இருதரப்புக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை இருதரப்பினரும் பயனடையக்கூடியவகையில் விரைவில் முடிவுறுத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக உள்ளது என்று அந்த நாட்டுத்தூதுவர் ரெமி லம்பேர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்ப மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அரசாங்கத்தால் தூரநோக்கு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பொருளாதார செயற்திட்டங்களைப் பாராட்டிய பிரான்ஸ் நாட்டு தூதுவர், இராஜதந்திர விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்குத் தயார் என்றும் தெரிவித்தார்.
இலங்கைக்கும், பிரான்ஸுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இருதரப்புக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையை விரைவாக முடிவுறுத்தவேண்டியது அவசியம் என பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த தூதுவர் ரெமி லம்பேர்ட், இருதரப்புக்கும் பயனடையக்கூடியவகையில் இந்தச் செயன்முறையை முடிவுறுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்