நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 20/05/2025 | Edited on 20/05/2025

 

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி,  ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.தாய்மாமனுக்கும் மருமகனுக்கும் இடையேயான உணர்வு பூர்வமான அன்பை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளின் அவசியத்தையும், தாய்மாமன் உறவை  உயிரோட்டமாக பதிவு செய்து உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மாமன் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய  மக்களின் நல் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூரி, மாமன் திரைப்படம் வெளியாகியுள்ள அனைத்து ஊர்களிலும் அனைத்து திரையரங்குகளிலும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்றிரவு (மே19) கோவில்பட்டி சத்யபாமா திரையரங்குக்கு வருகை தந்தார். தியேட்டர் நிர்வாகிகள்,  ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  மாமன் திரைப்படத்தை திரையில் ரசிகர்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தபோது, அங்கு ஒளி வெள்ளத்தில்  நடிகர் சூரி திடீரென நேரில் காட்சியளித்ததும்  ரசிகர்கள் விசில் அடித்தும் கைகளை அசைத்தும் உற்சாகத்துடன்‌ ஆரவாரம் செய்தனர். 

Advertisement

ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் சூரி, படம் பார்க்க வந்திருந்த சிலரின் குழந்தைகளை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் திரையரங்கில் ரசிகர்களிடம் மைக்கில் பேசுகையில், “குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் உங்களைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன். உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி படமா மாமன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்தக் கதையில், கதையின் நாயகனாக நான் இருந்தால் உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என நான் நம்பினேன். அதை இன்னைக்கு வெற்றி படமா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படத்தில் கற்பனையா எதுவும் இருக்காது. எல்லாமே நம் குடும்பத்தில் நடந்த விஷயமாகத்தான் இருக்கும். 

ரிலீஸ்க்கு முன்பே இந்தப் படம் வெற்றி படமா அமையும் என எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய மாபெரும் வெற்றி படமா அமையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கெல்லாம் நன்றி சொல்வதற்கு தான் நான் இங்கு வந்தேன்.  படம் பார்த்துட்டு வெளியே வரும் போது சென்னை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை, மதுரை என எல்லா ஊர்களிலும் சகோதரிகள், தாய்மார்கள் அழுதுடுறாங்க. இன்னைக்கு காலைல ஒரு கலெக்டர் சாரை பார்த்தேன். அவங்க சொல்றாங்க….  படம் பார்த்துட்டு குடும்பத்தோட அழுதுட்டோம். என் குடும்பத்தினர் வரிசையாக  உட்கார்ந்து இருக்காங்க. என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல. சமுதாயத்துக்கு இந்த மாதிரி படம் கொடுங்கன்னு சொன்னாங்க. 

ஒரு அக்கா என் கையில் ஒரு குழந்தையை கொடுத்துட்டு இந்த குழந்தை ரொம்ப லேட்டா பிறந்த குழந்தை. இந்தப் படத்தை பார்க்கிறப்போ அப்படியே என் குடும்பத்தை எடுத்து வச்ச மாதிரி இருக்குன்னு அழுதுட்டே இருந்தாங்க. இந்தப் படத்துக்குள்ள எல்லா உறவுகளும் இருக்குது. படம் முடிந்து நீங்க வீட்டுக்கு போறப்ப நல்ல வேலை இந்த படத்தை பார்த்துட்டோம். இந்த படத்துக்கு கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி அப்படின்னு உங்களுக்குள்ளே நீங்க பேசிக்கிடுவீங்க. இந்தப் படம் உங்களுக்கு உண்மையில் பிடித்திருந்தால் நீங்கள் அனைவரிடமும் சொல்லுங்க. தயவு செய்து இந்த மாதிரி படங்களை எல்லோரும் வந்து பார்க்கட்டும். அடுத்தடுத்து என் படங்கள் மூலம் உங்களில் ஒருத்தனா… உங்க குடும்பத்துக்குள்ள ஒருத்தனா எப்போதும் இருப்பேன் என நம்புறேன். நீங்களும் என்னை ஏத்துக்குவீங்கன்னு நம்புறேன்.  என் படம் எல்லாத்தையும் வெற்றி படமா கொடுங்க. எல்லா படத்துக்கும் வரவேற்பு கொடுங்க” என்றார். 

Advertisement

பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி கூறுகையில், “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு இப்போ டெய்லி நாலு ஊரு, ஐந்து ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறேன். இன்று காலையில் புறப்பட்டு நெல்லை, தூத்துக்குடி முடித்துவிட்டு இப்போது கோவில்பட்டி சத்யபாமா தியேட்டருக்கு வந்துள்ளேன். ரெஸ்பான்ஸ் ரொம்ப அற்புதமா இருக்குது. தியேட்டர் ஹவுஸ்புல்லா இருக்கிறது. எல்லா தியேட்டர் ஓனர்களும் சொல்லும் ஒரே வார்த்தை என்னவென்றால், மக்கள் எல்லோரும் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். 10 டிக்கெட், 15 டிக்கெட் என குடும்பமாக வருகிறார்கள் என்கிறார்கள். இதை கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படம் உறவு சார்ந்த படம்.  இது சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட கதை என இல்லாமல் இந்த படம் பாக்குறப்போ எல்லா குடும்பங்களுடன் ரியலாகவே நிறைய கனெக்ட் ஆகும். படம் ரிலீசுக்கு முன்னாடி எப்படி நாங்கள் சொன்னோமோ அது போலவே ரிலீசுக்கு அப்புறம் இந்த படம் மாபெரும் வெற்றி படமா அமைந்திருக்கு.  மாபெரும் வெற்றி படமா மக்கள் கொடுத்த காரணத்தினால் எல்லா திரையரங்கத்துக்கும் நேரடியா வந்து மக்களுக்கு நன்றி சொல்லும் விதமா வந்திருக்கேன்.  மாமன் படத்தை எல்லா மக்களும் கொண்டாடுறாங்க. நான் சொல்ற வார்த்தை அனைத்துமே மக்கள் சொல்ற வார்த்தை. இந்தப் படத்தை பார்த்துட்டு என் வாழ்க்கையில் எனக்கு இப்படி இருந்தது. எங்க அக்காவுக்கு இந்த மாதிரி இருந்தது. எங்க மாமாவுக்கு இந்த மாதிரி இருந்தது. எனக்கு இந்த பையன் இப்படித்தான் பிறந்தான் என எல்லோரும் சொல்லி ஒரு எமோஷனல்ல அழுகிற போது இதைத்தான் நாங்க விரும்பினோம். ஈசியா படத்தை பார்த்துட்டு கடந்து போய்விட முடியாது. இது எல்லோரிடமும் கனெக்ட் ஆகும் என நினைத்தோம். வருஷத்துக்கு ஒரு படம் இந்த மாதிரி குடும்ப படங்களை கொடுத்துக்கிட்டு இருக்கணும் என நான் ஆசைப்படுகிறேன். குடும்ப உறவு சார்ந்த படங்களுக்கு நம்ம தமிழ் மக்கள் எப்போதும் அதற்கான மரியாதையையும் ஆதரவையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது குறையவே இல்ல” என்றார்.

கதைகளுக்கான நாயகர்களை தேடும் சூழலை திரும்பவும் தமிழ் சினிமாவில் உருவாகி வருவதை எப்படி பார்க்கிறீர்கள்..? என்ற கேள்விக்கு, “ரொம்ப நல்ல விஷயம் தான். கதையின்  நாயகர்கள் என்பது எப்போதும் வெற்றி தான்” என்று பதிலளித்தார்.

Advertisement

மலையாள சினிமாக்களை போல் எதார்த்தமான வாழ்வியல் சார்ந்த படங்கள் இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்காக வந்து கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் இது மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பார்களா? என்ற கேள்விக்கு, “கதை சரியாக இருந்தால் எல்லோரும் ஆக்ட் பண்ணுவார்கள். கதை களம் தான் முக்கியம். அதே நேரத்தில் பெரிய பெரிய ஹீரோக்களை பார்க்கையில்  சில கதைகளை பண்ண முடியாத சூழலில் இருக்கும். அவங்களுக்கான ஒரு படத்துக்கான பட்ஜெட், அவங்களுக்கான ஸ்கேல் பெருசா இருக்கிறப்போ சில விஷயங்களை அவர்களால் பண்ண முடியாது. ஆடியன்ஸ்க்கு எல்லா விதத்திலும் படம் கொடுக்கணும். ஒரு விதத்தில் மட்டும் கொடுக்க முடியாது. குட்டி  பசங்க முதல் பெரிய பெரிய ஆட்கள் வரை ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு கேட்டகரியான சில படம் தேவைப்படுது. அதற்கு ஏற்ப பெரிய பெரிய ஹீரோக்கள் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள். எமோஷனல் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். எமோஷனலுக்கு, குடும்ப உறவுக்கு  ஏ.பி.சி.ன்னு பிரிவு  கிடையாது. எல்லோரும் மனுசங்க தானே”என்று பதிலளித்தார்.

அரசியலில் நீங்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு “இப்போ நல்லா இருக்கிறேன் சார். நம்மலோட சினிமாவுக்கான வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கு. சூப்பரா இருக்கு. இன்னைக்கு மக்கள் கொண்டாடுறாங்க. இதை பார்த்து போய்ட்டு இருக்கேன்” என்றார்.

செய்தியாளர் – எஸ்.மூர்த்தி

Advertisement