
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/05/2025 | Edited on 20/05/2025

சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க ‘கருடன்’ படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சூரி பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சூரி கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சிறப்பு அழைப்பாளராக சென்றுள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவர்களுக்கு சூரி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவில், “என் அன்பான தங்கச்சீங்களும் தம்பீங்களும், நீங்க குடுத்த அன்பும் நம்பிக்கையும் தான் — நான் சம்பாதிச்ச பெரிய பொக்கிஷம். மாமன் படத்துக்கு நீங்க குடுத்த ஒவ்வொரு லைக், கமெண்ட், ஷேரும் எனக்கு சொல்ல முடியாத மோட்டிவேஷனா இருக்கு! உண்மையிலே இது சப்போர்ட் இல்ல, இது உங்க தூய்மையான அன்பு தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.