தொழில்நுட்பம்
வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: விதை நடவு பணிகளில் ட்ரோன்கள் – சென்னையில் அறிமுகம்!

வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: விதை நடவு பணிகளில் ட்ரோன்கள் – சென்னையில் அறிமுகம்!
சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் விவசாய பயன்பாட்டுக்கான அதிநவீன பிரோன்களை தயாரித்துள்ளன. எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் ஏரோஸ்பேஸ் மற்றும் பென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து 3 வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த ட்ரோனை உருவாக்கி உள்ளனர். இந்த ட்ரோன் பல்கலை. வேந்தர் சண்முகம் மற்றும் பல்கலை. தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.விவசாய பயிர்கள் மீது பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கான NAI AGRO DRONE சான்றிதழ் இந்த ட்ரோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ட்ரோனின் மூலம் ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 3 நிமிடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரம் தெளிக்க முடியும். 10 லிட்டர் கொள்ளளவு வரை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த ட்ரோனால் 3 நிமிடங்களில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு விதைகளை நடவு செய்ய முடியும். இதனை இயக்குவதற்கு விதிமுறைகளின் படி உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.ட்ரோன் வெளியிடப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் 20 ட்ரோன்களை முன்பதிவு செய்துள்ளனர். இதுதவிர இந்திய ராணுவத்திற்கு ஏற்றதுபோல இந்த ட்ரோனை வடிவமைத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ட்ரோன்களை இயக்குவதற்கு ராணுவ வீரர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரோன் தயாரிப்பு குழுவினர், “விவசாயத் தேவைகளுக்காக பயன்படும் இந்த ட்ரோன் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மானியத்துடன் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. ட்ரோன்கள் ஏதேனும் பழுதடைந்தால் அதனை சீர்படுத்த சென்னை, கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் சர்வீஸ் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன.மாநிலங்கள் தோறும் ட்ரோன் டீலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 100 டீலர்கள் தயாராக உள்ளனர். இந்த ட்ரோன்களை வாங்குவதற்கு தமிழக அரசு 50% வரை மானியம் அளிக்கிறது. இதற்கான மானியத்தை பெறுவதற்கு விவசாய அட்டை மற்றும் ஆதார் அட்டை இருந்தால் போதும். இந்த ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சியை 7 முதல் 10 நாட்களுக்குள் கற்றுக்கொள்ளலாம். 25 கிலோ எடை கொண்ட ட்ரோன்கள் மற்றும் அதற்கு மேல் எடை கொண்ட துரோன்கள் என 2 ரகங்களாக பிரித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே முதல்முறையாக விதைகளை நடவு செய்யும் ரோன்களை தற்போதுதான் அறிமுகம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.