
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 21/06/2025 | Edited on 21/06/2025

11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று(21.06.2025) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகை நமிதா, அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நமிதா, ஆங்கிலத்தை விட தாய் மொழி தான் முக்கிய என்றார். அவர் பேசியதாவது, “உங்களுக்கு இங்கிலீஷ் அல்லது வேறு மொழி தெரிந்திருந்தால் நல்லதுதான். அது நமக்கு பயனளிக்கும். ஆனால் அதுக்கு முன்னாடி நமது தாய் மொழி தெரிய வேண்டும். என் குழந்தையிடம் இன்று வரைக்கும் நான் இங்கிலீஷில் பேசியது கிடையாது. அவனுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற மொழிகள் தெரியும். இதுதான் அவனுக்கு தாய் மொழி.
என் பையனுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, சூப்பர் மேன் தெரியாது, ஆனால் ஜெய் ஹனுமான் கண்டிப்பா தெரியும். அவனுக்கு ஹனுமான் தான் பிடிக்கும். இதை நான் ரொம்ப பெருமைய சொல்வேன். ஐ லவ் இந்தியா அண்ட் தமிழ்நாடு” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்வு ஒன்றில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் அவமானப்படுவார்கள் என்று பேசியிருந்த நிலையில் அது சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.