இந்தியா
போலி பிறப்புச் சான்றிதழ் விவகாரம்: ஆசிரியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
போலி பிறப்புச் சான்றிதழ் விவகாரம்: ஆசிரியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியான பிறப்புச் சான்றிதழ் கொடுத்து, கூடுதலாக ஐந்து ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்து அரசுக்கு சுமார் 41 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு புதுச்சேரி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு, புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், சிபிசிஐடி காவல் நிலையத்தில் நாராயணசாமி என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய நாராயணசாமியின் உண்மையான பிறந்த தேதி 08.04.1953 என்றும், ஆனால் அவர் தவறான தகவல்களை அளித்து, திண்டிவனம் நீதித்துறை நடுவர் – II நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு உத்தரவின் அடிப்படையில் தனது பிறந்த தேதியை 08.04.1958 எனப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன் மூலம், 2013 ஆம் ஆண்டிலேயே பணி ஓய்வு பெற வேண்டிய நாராயணசாமி, நேர்மையற்ற நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டு வரை தனது பணி ஓய்வு காலத்தையும் தாண்டி அரசுப் பணியைத் தொடர்ந்ததுடன், அரசாங்கத்திற்கு ஏறக்குறைய ரூ.41,85,311/- நஷ்டத்தை ஏற்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர் தனது பணிப் பதிவேட்டில் தனது உண்மையான பிறந்த தேதியை சட்டவிரோதமாகத் திருத்தம் செய்ததும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.இதன் அடிப்படையில், புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அளித்த உத்தரவின் பேரில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.நாராயணசாமி மீது, பொது ஊழியருக்கு தவறான தகவல் அளித்தல், பொய் சாட்சியம் அளித்தல், ஏமாற்றும் நோக்கில் பொய்யான ஆவணம் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்டதை உண்மையாக உபயோகம் செய்தல், ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில், இன்று (30.06.2025) வழக்கு விசாரணை முடிவடைந்தது. நாராயணசாமி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
