இலங்கை
செம்மணிப் புதைகுழியில் பின்னிப்பிணைந்தபடி ஏராளமான சிதிலங்கள்!

செம்மணிப் புதைகுழியில் பின்னிப்பிணைந்தபடி ஏராளமான சிதிலங்கள்!
எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் சிக்கல்
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது, ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் பல்வேறு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், என்புக்கூடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அறிவிப்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி புதைகுழி, ‘மனிதப் புதைகுழியாக’ நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் அறிவிக்கப்பட்ட பின்னர், தற்போது மேலதிக அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய அகழ்வுப் பணிகளின் போதே, ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் மனிதச் சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிணைந்த நிலையில் சிதிலங்கள் இருப்பதால், நேற்றைய அவதானிப்புக்களை பட்டியலிடுவதும், கணக்கிடுவதும் சிரமமாக மாறியுள்ளது.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரணித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப்பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.