இலங்கை
பாடசாலைகள் மூடல் தடுக்கப்படவேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

பாடசாலைகள் மூடல் தடுக்கப்படவேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!
அன்று அதிக மாணவர்களைக் கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்கமுடியாமல் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய நிறுவுநர் நினைவுநாளும், பரிசளிப்பு விழாவும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்:- போர், இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப் போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வலிகாமம் வடக்குப் பிரதேசம் யாழ்.மாவட்டத்தில் போர் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம். மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல குடும்பங்கள் இங்கு வந்து மீளக்குடியமர வேண்டியிருக்கின்றார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில்கூட மக்களை இன்னமும் குடியமர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது .யாழ்.நகரப் பகுதியை நோக்கிப் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கு விரும்பவில்லை. வலிகாமம் வடக்கைப் பொறுத்தவரை பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டமையால் அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் இந்தப் பகுதிப் பாடசாலைக் ளின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். – என்றார்.