இலங்கை
அர்ச்சுனாவின் எம்.பி. பதவி; இடைக்காலத் தடையில்லை!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி; இடைக்காலத் தடையில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடைகோரப்பட்ட நிலையில், அவ்வாறான உத்தரவுகளை மன்றம் மறுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது மருத்துவ அதிகாரிப் பதவியில் இருந்து விலகாமல், பொதுத்தேர்தலில் போட்டியிட்டதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது
.
இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டே பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கச் செய்தார் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட் டிருந்தது.
இந்த வழக்கு அர்ச்சுனா எம்.பி.யின் தரப்புச் சமர்ப்பணங்களுக்காக நேற்று அழைக்கப்பட்டபோது, அர்ச்சுனாவின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, ‘எனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சம்பளமின்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஆதலால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது’ என்று தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, வழக்கு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கு முடியும் வரை நாடாளுமன்ற அமர்வுகளிலும், வாக்கெடுப்புகளிலும் பங்கெடுப்பதற்குத் தடை விதிக்குமாறு மனுதாரர் கோரியிருந்த நிலையில் அந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.