இலங்கை
மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் பாதுகாப்பாக யாழ்.பல்கலையில்

மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் பாதுகாப்பாக யாழ்.பல்கலையில்
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 என்புத் தொகுதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப்பை, பொம்மை, காலணி, சிறுவளையல் போன்ற பொருள்கள் நீதிமன்ற கட்டுக்காவலிலும் சான்றுப் பொருள்களாகப் பேணப்பட்டு வருகின்றன என சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் நேற்றையதினம் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:-
மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மூன்று நாள்கள் இடம்பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத் தப்பட்டு பின் ஆறுநாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன. அதன் பின் இரண்டாம்கட்ட அகழ்வுப்பணி தொடர்ச்சியாக 8 நாள்களாக இடம்பெற்று வருகின்றது. மொத்தமாக 17 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலின் கீழ் சட்டமருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கையளிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துபீட சட்ட மருத்துவத்துறையில் உள்ள என்பு ஆய்வு கூடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளன.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பாடசாலை புத்தகப்பை, பொம்மை,காலணி, சிறு வளையல் போன்ற பொருள்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் சான்றுப் பொருள்களாக பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.
தற்போது அகழ்வுப் பணிகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. எந்தப் பொருள்களையும் ஆய்வுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
முழுமையாக அகழ்வுப்பணிகள் நிறைவு பெற்றதன் பிற்பாடே மனித என்புத்தொகுதிகள் சட்ட மருத்துவ தலைமையிலான குழுவின அதிகாரி தலைமையிலான குழுவினரால் ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் இறப்புக்கான காரணம், மீட்கப்பட்ட குறித்த என்புத் தொகுதிகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது என்பன அறிவிக்கப்படும். மேலும் அகழ்வுகள் முடிவுற்றபின் கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருள்களின் கால எல்லையினை தொல்லியற்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவாவெளிப்படுத்துவார் – என்றார்.