பொழுதுபோக்கு
யூனிட் உள்ள வராதே… சேரன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய கே.எஸ். ரவிக்குமார்: சீக்ரெட்டை உடைத்த சித்தப்பு!

யூனிட் உள்ள வராதே… சேரன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய கே.எஸ். ரவிக்குமார்: சீக்ரெட்டை உடைத்த சித்தப்பு!
சினிமா உலகம் நிச்சயம் இல்லாத ஒன்று என எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக, ரசிகர்கள் மட்டுமின்றி அந்த துறையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் இதனை நன்கு உணர்ந்தவர்கள் தான். ஒரு நடிகர் எப்போதுமே ஹீரோவாக இருக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், ஹீரோவாக இருந்த நபர் குணச்சத்திர பாத்திரங்களை ஏற்று நடித்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பால் எல்லோரையும் கவர முடியும் என்பதற்கு நடிகர் சரவணன் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.சுமார் 1980-90 காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கியவர் சரவணன். இவர் நடித்த எத்தனையோ திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றன. எனினும், அதன் பின்னர் இவர் குணச்சத்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.அவ்வாறு நடிக்கும் போதும் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘பருத்திவீரன்’, ‘கார்கி’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்நிலையில், கலாட்டா தமிழ் சேனலுக்கு நடிகர் சரவணன் அளித்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சேரன் ஆகியோர் இடையே ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “சேரன், ஒரு காலத்தில் பெரிய ஹீரோ ஆகிவிட்டார். ஆனால், நான் பார்த்த போது சேரன் ஒரு உதவி இயக்குநராக இருந்தார். ஒரு சமயத்தில், யூனிட்டுக்குள் வர வேண்டாம் என்று சேரனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் கே.எஸ். ரவிகுமார். அப்போது, நான் எடுத்துக் கூறினால் சேரனை மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் சேர்த்துக் கொள்வார் என்று என்னிடம் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் ‘சூரியன் சந்திரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.அந்த நேரத்தில் சேரனை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கே.எஸ். ரவிக்குமாரிடம் நான் அறிவுறுத்தினேன். ஆனால், கே.எஸ். ரவிக்குமார் அவ்வளவு எளிதாக கேட்கவில்லை. மாறாக, சாப்பாடு பரிமாறும் வேலையை செய்யுமாறு சேரனிடம் கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.இதனால், சுமார் மூன்று நாட்களுக்கு அதே வேலையை சேரன் செய்தார். அதன் பின்னர், தான் மீண்டும் சேரனை உதவி இயக்குநராக தன்னிடம் கே.எஸ். ரவிக்குமார் சேர்த்துக் கொண்டார்” என்று நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.