இலங்கை
மொழியுரிமையை ஏற்காமை வரலாற்றில் பெரும் தவறே!

மொழியுரிமையை ஏற்காமை வரலாற்றில் பெரும் தவறே!
படிப்பினைகளை கற்காவிடின் வரலாறு மீளவரும்- நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவிப்பு
எமது நாட்டில் மொழியுரிமைக்கு மதிப்பளிக்க முடியாமற்போனமை வரலாற்றுத் தவறே. இது சிறிய விடயமல்ல. இந்தத் தவறை நாங்கள் விளங்கிக் கொள்ளாவிடில். கசப்பான வரலாறு மீளத்திரும்பும் – இவ்வாறு நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச கரும மொழிகள் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு. இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதியமைச்சர் ஹர்ஷண மேலும் தெரிவித்ததாவது:-
எமது நாட்டில் மொழியுரிமையை ஏற்காதமையும், அதை மதிக்காமல் விட்டமையும் சிறிய தவறல்ல. இதை நாங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதனால் மொழி உரிமைகள் தொடர்பாக சட்ட அங்கீகாரம் மட்டும் போதாது. ஏட்டில் உள்ள உரிமைகள் மக்களின் வாழ்க்கையில் யதார்த்தமாக மாற வேண்டும். மொழி என்பது ஒரு நபரின் அடையாளத்தின் இதயம். அது நினைவின் குரலும் கூட, மரியாதையின் தாளம். சிந்தனையின் கட்டமைப்பு. ஒருவருக்கு தனக்கு நெருக்கமான மொழியில் கருத்துத் தெரிவிக்க அல்லது கருத்துக்களைச் செவிமெடுக்கச் சந்தர்ப்பம் இல்லையென்றால், அந்தச் சமூகத்தில் மனிதாபிமானம் நிராகரிக்கப்படுகிறது என்றே அர்த்தம். அதனால் தான், கோஷங்கள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. மொழிக் கொள்கையை செயற்படுத்துவதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுகிறது. எமது வரலாற்றில் மொழியுரிமைகள் புறக்கணிக்கப்பட்டமை இனங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மையையும், ஐக்கியமின்மையையும் ஏற்படுத்தியது. இறுதியில் ஆயுத மோதல்களுக்கும் காரணமாக அமைந்தது. இந்த படிப்பினையை சரியாக கற்றுக்கொள்ளாவிட்டால் கசப்பான வரலாறு மீண்டும் வருவது நிச்சயமாகும்.
சமத்துவம் இல்லாமல் நீடித்த அமைதி இருக்க முடியாது. அரசு தனது மக்களின் மொழியை மதிக்காவிட்டால் சமத்துவம் ஏற்படப்போவதில்லை. நாங்கள் அதனைப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திலிருந்து அனைத்து கிராம அலுவலர் பிரிவிலும் இரண்டு மொழிகளிலும் விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் – என்றார்.