இலங்கை
இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் ஏனைய நாடுகளுக்கு அதிருப்தி; சொல்கிறார் சரத் வீரசேகர!

இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் ஏனைய நாடுகளுக்கு அதிருப்தி; சொல்கிறார் சரத் வீரசேகர!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- தேசிய பாதுகாப்புத் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமரவைத்து கற்பிப்போம் என்று குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்புத் தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடனும் இணக்கமாக செயற்படவேண்டும். இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக்கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ளக்கூடாது. இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது- என்றார்.