சினிமா
பாடல் வரிகள் திரைப்பட தலைப்பு!ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை!வேதனைப் பகிரும் வைரமுத்து!

பாடல் வரிகள் திரைப்பட தலைப்பு!ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை!வேதனைப் பகிரும் வைரமுத்து!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒரு புதிய போக்கு அதிகரித்து வருகிறது. பழைய திரைப்படப் பாடல்களின் புகழ்பெற்ற வரிகள் மற்றும் பல்லவிகள், புதிய திரைப்படங்களின் தலைப்பாக மாற்றப்படுகின்றன. சில நேரங்களில் அந்தப் பாடல்களே படம் முழுவதும் ஒரு முக்கிய அம்சமாக உருவாகின்றன. ஆனால், இதன் பின்னணி எப்போதும் நேர்மையாகவும், நாகரிகமாகவும் நடைபெறவில்லை என்பது தான் வருத்தம்.பல்வேறு இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள், தங்களது படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கின்றனர். குறிப்பாக இளையராஜா மற்றும் வைரமுத்து போன்ற தன்னிகரற்ற கலைஞர்கள், தங்களது பாடல்களின் உரிமை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.இளையராஜா, தமிழ்த் திரைப்பட இசையில் ஒரு புரட்சிகர ஆளுமை. அவருடைய பாடல்களை அனுமதி இல்லாமல் திரைப்படங்களில் பயன்படுத்தும் விஷயத்தில் அவர் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக இசை, பாடல் வரிகள், பின்னணி இசை உள்ளிட்டவை அனைத்தும் காப்புரிமை உள்ளவை என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதனால், சில சமயங்களில் அவர்மீது, “இவர் மட்டும் காசுக்காக உரிமை கேட்கிறார்” என்ற விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், இது வெறும் காசுக்கான முயற்சி அல்ல; அவர் தனது கலை மற்றும் உழைப்பிற்கான மதிப்பீடு என்பதை நெருக்கமாக அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.பாடலாசிரியர் வைரமுத்து சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினார். “பொன்மாலைப் பொழுது”, “கண் சிவந்தால் மண் சிவக்கும்”, “மெளன ராகம்”, “விண்ணைத் தாண்டி வருவாயா”, “நீ தானே என் பொன் வசந்தம்” போன்ற பல திரைப்பட தலைப்புகள், அவரது பாடல் பல்லவிகளிலிருந்து எடுக்கப்பட்டவை என அவர் தெரிவித்தார்.“யாரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை என்பதே என் வருத்தம்,” என்று அவர் மனக்கசப்புடன் கூறியுள்ளார். அதே நேரத்தில், இதை சொல்லாமல் எடுத்துக் கொண்டதைப் பற்றி அவர் எவரையும் நேரில் கண்டித்ததில்லை என்றும், சந்தித்த சந்தர்ப்பங்களில் கூட இதைப் பற்றி பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “ஏன் என்னைக் கேட்கவில்லை?” என்று கேட்பது நாகரிகமற்றது என நினைக்கிறேன். ஆனால், ஒரு வார்த்தை கேட்டே செய்திருந்தால், அவர்களுக்குத்தான் நாகரிகம் இல்லை எனச் சொல்லலாம்” என்றும் அவர் சிந்தனைபூர்வமாக கூறியுள்ளார். மேலும் இதனை அவதானித்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.