இலங்கை
செம்மணியில் தொடரும் மர்மம்; நாளுக்கு நாள் அதிகரிக்கும் எலும்புக்கூடுகள்

செம்மணியில் தொடரும் மர்மம்; நாளுக்கு நாள் அதிகரிக்கும் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயான புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (8) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளானது சிக்கலான நிலையில் காணப்படுகிறது.
மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள திரு.கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் இன்றையதினம் புதைகுழியை பார்வையிட்டனர்.
குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.