இலங்கை
செம்மணிப் புதைகுழி விடயத்தில் அசமந்தப்போக்கில் அரசாங்கம்; ஹக்கீம் எம்.பி. குற்றச்சாட்டு!

செம்மணிப் புதைகுழி விடயத்தில் அசமந்தப்போக்கில் அரசாங்கம்; ஹக்கீம் எம்.பி. குற்றச்சாட்டு!
செம்மணி மனிதப் புதைகுழி உள்ள இடத்துக்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமற்போனோர் அலுவலகமோ செல்லவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. செம்மணியில் மனிதப்புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருள்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
தமிழ்ப் பத்திரிகைகளில் அந்தச் செய்திகளைப் பார்க்கலாம். ஆனால் தெற்கில் மற்றைய பத்திரிகைகளில் இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவ தில்லை. எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாகக் குறிப்பிடப்படுகின்றன. யூடியூப் சனல் ஒன்றை நடத்தும் தரிந்து ஜயவர்தன என்பவர் அங்கு சென்று
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆராய்கின்றார். ஆனால் அரச தரப்பில் எவரும் இதுவரையில் அந்தப் பகுதியில் கால் வைக்கவில்லை என்று அங்கு அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகின்றனர்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தினர் அங்கு சென்றனரா? காணாமற்போனோர் தொடர்பான சட்டத்தின்படி உங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். அதனைச் செய்யாமல் இருப்பது ஏன்? உங்களின் தேசப்பற்றாளர்களுக்கு நீங்கள் பயத்துடன் இருக்கின்றீர்கள்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடுகின்றீர்கள் என்றால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அபுஹிந் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய இன்னுமொரு அபு இருந்தார். பக்தம்அபு என்பவரே அவர், அவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர். சஹரானின் மனைவியிடமும் முறையாக விசாரித்தால் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளலாம். இவரிடம் சாட்சியங்களைப் பதிவுசெய்ய ஆணைக்குழு கேட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இறுதியில் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், பல்வேறு விடயங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
காலத்தால் மூடிமறைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ளார். நீங்கள் வயிற்றுக்குத் தெரியாமல் மருந்து குடிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மைகளை உண்மையாகவே வெளியிட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்றார்.