இலங்கை
மனைவியைக் காக்க மஹிந்த கெஞ்சவில்லை; சாகர காரியவசம் தெரிவிப்பு!

மனைவியைக் காக்க மஹிந்த கெஞ்சவில்லை; சாகர காரியவசம் தெரிவிப்பு!
ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்யவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கூறுமாறு மஹிந்த ராஜபக்ச மகாநாயக்க தேரரிடம் கோரினார் என்று கூறப்படும் செய்தியை மொட்டுக் கட்சிச் செயலாளர் சாகர காரியவசம் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மக்களை நம்ப வைக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கண்டவர்களையெல்லாம் கைது செய்கிறது அரசு. அதேபோன்று தான் ராஜபக்ச குடும்பத்தின் மீதும் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது.
நாமல், ஷிரந்தி, மஹிந்த என எல்லோர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த போது நல்லாட்சி அரசு நிதி குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவொன்றை உருவாக்கி மஹிந்தவின் குடும்பம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தியது. உரிய ஆதாரம் இல்லாததால் அது கைவிடப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ராஜபக்ச குடும்பம் மீது சேறு பூசுகிறது இந்த அரசு, மஹிந்த தேரரை சந்திக்கவுமில்லை, அவ்வாறு கெஞ்சவுமில்லை. எல்லாம் அரச தரப்பின் கட்டுக்கதை – என்றார்.