பொழுதுபோக்கு
7 நாள்ல ஒரு படமா? ரிஸ்க் வேண்டாம் 35 நாள் தரேன், சிறப்பா எடுங்க: ஊமை விழிகளுக்கு வழிகாட்டிய கேப்டன்!

7 நாள்ல ஒரு படமா? ரிஸ்க் வேண்டாம் 35 நாள் தரேன், சிறப்பா எடுங்க: ஊமை விழிகளுக்கு வழிகாட்டிய கேப்டன்!
1986 சுதந்திர தினத்தன்று வெளியான படம்தான் ஊமை விழிகள். விஜயகாந்த், கார்த்திக், சந்திரசேகர், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், சரிதா, ரவிச்சந்திரன், இளவரசி, ஸ்ரீவித்யா, விசு, கிஷ்மு, செந்தில், மலேஷியா வாசுதேவன் ஆகியோரின் கூட்டணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியது திரைப்பட கல்லூரி மாணவர்கள்தான்.அப்போது, திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் மதிக்கக்கூட மாட்டார்கள். ஏளன பேச்சு ஏராளமாக வந்துவிழும். ஆனால், அத்தனையும் இந்தப் படத்தின் மூலம் தலைகீழாக மாறியது. மேலும், இப்படம் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பெருமை சேர்த்தது.ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான சஸ்பென்ஸ் த்ரில்லரை தமிழ் திரைப்படத்தில் பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்தனர். ரவிச்சந்திரனின் வில்லத்தனம் மிரள வைத்தது மட்டுமல்லாமல் சினிமாவில் அவருக்கான ரீஎண்ட்ரியாகவும் அமைந்தது.ரிசார்டுக்கு வரும் இளம்பெண்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் காணாமல் போகிறார்கள். இதனை விசாரிக்க வரும் பத்திரிக்கையாளர் சந்திரசேகர் கொல்லப்படுகிறார். இதனையறிந்த பத்திரிக்கை உரிமையாளர் ஜெய்சங்கர், காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகாந்த், பத்திரிகையாளர் அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து கொலையாளியை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை. இக்கதையை ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு திக் திக் திரைக்கதை மூலம் மாணவர்கள் அசத்தியிருப்பார்கள். வெள்ளி விழா கொண்டாடியது மட்டுமின்றி, டிரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் மனோஜ் கியான், ஆபாவாணனின் பின்னணி இசையும், பாடல்களும்தான்.ஊமை விழிகள் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான உதயகுமார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று ஊமை விழிகள் படம் உருவான விதம் குறித்து பேசினார். 7 நாட்களில் ஒரு படம் எடுக்கலாம்னுதான் முதன்முதலில் ஐடியா பண்ணி ஆபாவானன் போய் ராவுதர் சார் கிட்டயும் விஜயகாந்த் சார் கிட்டயும் சொன்னபோது, ‘இப்படி எல்லாம் படம் எடுப்பீங்க? என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?-ன்னு கேட்டாங்க.’நாங்க 2 லட்சம் ரூபாய்தான் தர முடியும்’னு தயாரிப்பு நிறுவனம் சொன்னப்போது, விஜயகாந்த் ‘நான் 35 நாட்கள் தரேன். நீ அதே சம்பளத்துக்கு வேலை செய். நீங்க இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க, சிறப்பாக எடுங்கனு சொல்லி, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு, விஜயகாந்த் சார்தான் வாழ்க்கையை உருவாக்கிவிட்டார் என்று கூறினார்.அந்த யூனிட்ல நானும் இருந்ததுனால, அதற்கு நன்றி செலுத்திய வெளிப்பாடுதான் அந்த ‘வானத்தை போல’ (பாடல்). அவருடைய மறைவுக்குப் பின்னாடி எங்களுக்கு 1,000 போன் கால் வந்திருக்கும், ரஜினி சார் கூட போன் செய்து பேசினார்” என்றார் உதயகுமார்.”அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே…” இந்தப் பாடல் வரிகள் தமிழ் சினிமாவில் என்றும் பொற்காலப் பாடலாக நிலைத்து நிற்கின்றன. விஜயகாந்த் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான ‘சின்னக்கவுண்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், கேப்டன் ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது.