பொழுதுபோக்கு
என் படத்துல நோ மேக்கப்; போய் முகம் கழுவிட்டு வாங்க: நடிகைக்கு கண்டிஷன் வைத்த பாலா!

என் படத்துல நோ மேக்கப்; போய் முகம் கழுவிட்டு வாங்க: நடிகைக்கு கண்டிஷன் வைத்த பாலா!
தமிழ் சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் என்று சிலவற்றை நாம் கூறுவோம். அந்தப் பட்டியலில் சேது திரைப்படம் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதுவரை வெளியான அனைத்து கமர்ஷியல் படங்களில் இருந்தும், இப்படம் தனித்து நின்றது. தமிழில் காதலை மையமாக கொண்டு வெளியான படங்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆனால், இதில் காதலை அணுகிய விதம் மாறுபட்ட கோணத்தில் இருந்ததாக அன்றைய காலகட்டத்தில் பலரும் கூறினார்கள்.இந்த பெருமை அனைத்தும் இயக்குநர் பாலாவிற்கு சென்றடைய வேண்டியது. நடிகர்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள் சிறந்த களமாகும். விக்ரம், சூர்யா, அதர்வா, வரலட்சுமி, ஆர்யா, விஷால் என பாலாவின் திரைப்படங்களில், இவர்கள் அனைவரும் தனித்து தெரிந்தனர்.அந்த வகையில், சேது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபிதாவையும் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்நிலையில், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக பிகைண்ட்வுட்ஸில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகை அபிதா, சேது திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.அதன்படி, “முதல் நாள் படப்பிடிப்பின் போது மேக்கப் போட்டு சென்றேன். யூனிட் உள்ளே நுழைந்ததும் கையில் ஒரு சோப் கொடுத்து முகத்தை கழுவி விட்டு வருமாறு இயக்குநர் பாலா கூறினார். எதற்காக, மேக்கப்பை அகற்ற வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.தன்னுடைய படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் யாரும் மேக்கப் போடக் கூடாது என்றும், இயல்பாக இருந்தால் போதும் என்றும் இயக்குநர் பாலா பதிலளித்தார். மேலும், என்னுடைய அறிமுக காட்சியின் போது சரியாக நடனமாட வரவில்லை.இதனால், எல்லார் முன்பும் என்னை பயங்கரமாக திட்டி விட்டார். உடனடியாக எனக்கு அழுகை வந்து விட்டது. அதன் பின்னர், என்னுடைய நன்மைக்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்து கண்டித்ததாகவும் பாலா என்னிடம் கூறினார்” என்று நடிகை அபிதா தெரிவித்துள்ளார்.