இந்தியா
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலை சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலை சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு!
திருவண்ணாமலை கிரிவலப்பாதை மலையில் இருந்து பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் ஐந்து பேர் சிக்கினர். இவர்களைக் கடந்த 16 மணி நேரமாக மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரி அருகே நவம்பர் 30-ஆம் தேதி கரையை கடந்தது. புயலானது நேற்று (டிசம்பர் 1) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் வஉசி நகர் 11-வது தெரு உள்ளது. இங்கு மொத்தம் 75 வீடுகள் இருக்கிறது.
கனமழை காரணமாக, நேற்று மதியம் மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறைகள் உருண்டு வஉசி நகர் 11-வது தெருவில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்தது.
இந்த வீட்டில் ராஜேந்திரன், அவரது மனைவி மீனா, குழந்தைகள் இரண்டு பேர், உறவினர் குழந்தை ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். பாறை சரிந்து விழுந்ததில், இவர்கள் ஐந்து பேரும் வீட்டிற்குள் சிக்கினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி சுதாகர் ஆகியோர் விரைந்தனர். பாறைகள் சரிந்து, வீடுகளுக்குள் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி, டிஐஜி ஆகியோரும் நேற்று இரவே ஸ்பாட்டுக்கு சென்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மீட்பு பணிகள் மிகவும் சவாலாக அமைந்தது. இரவு நேரத்தில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்தசம்பவம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரை தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் விசாரித்திருக்கிறார்.
இன்று காலை முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் பாறை சரிந்து வீட்டில் சிக்கிய ஐந்து பேரையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்
Vidaamuyarchi: இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?