இலங்கை
லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் கட்டுகஸ்தோட்டை மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள தனது அலுவலக வளாகத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதனையடுத்துஇ அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பிரத்தியேக செயலாளர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.