உலகம்
புலிகள் மீதான தடை பிரிட்டனில் தொடரும்!

புலிகள் மீதான தடை பிரிட்டனில் தொடரும்!
தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணையம் அறிவிப்பு
(ஆதவன்)
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான ‘தடையை நீக்க முடியாது என அந்த நாட்டின், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன் முறையீட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் புலிகள் மீதான தடை பிரிட்டனில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் 2001ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதியன்று பிரிட்டன் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை அகற்றப்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்துக்கு 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 7 ஆம் திகதியன்று விண்ணப்பித்திருந்தது.எனினும் கூட்டுப் பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டுக்கான பிரித்தானிய மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கை 2019 மார்ச் 8 ஆம் திகதியன்று நிராகரிக்கப்பட்டது. பின்னர் 2020 ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று மேன்முறையீட்டு ஆணையம் இது தொடர்பில் மேன்முறையீட்டை மேற்கொள்ள அனுமதித்தது.
இது தொடர்பான தீர்ப்பு 2021 மே 13 ஆம் திகதி வழங்கப்பட்டது. அதில், 2012 ஜூன் 3 ஆம் திகதிக்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும் என்றும், பிரிட்டனின் இராஜாங்கச் செயலரே அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஆணையகம் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்வதாக 2021 ஓகஸ்ட் 31 ஆம் திகதி பிரிட்டனின் இராஜாங்க செயலர் அறிவித்தார்.
இந்த நிலையில் 2021 ஒக்ரோபர் 12 ஆம் திகதியன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. அத்துடன் மற்றொரு குழுவும் தடை நீக்கம் செய்வற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித் து. அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடரவிரும்புவதால், பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்படக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதத்தை முன்வைத்திருந்தது.
அந்த விண்ணப்பங்களும் இராஜாங்க செயலாளரால் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே மேன்முறையீட்டு ஆணைக்குழு கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டை நிராகரித்ததுடன், பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடரவும் உத்தரவிட்டுள்ளது.
புலிகள் மீதான பிரிட்டனின் தடை நீடிப்பை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ச)