உலகம்
ஐரோப்பிய தேர்தல் எதிரொலி

ஐரோப்பிய தேர்தல் எதிரொலி
நாடாளுமன்றத்தைக் கலைத்தார் மக்ரோன்
(ஆதவன்)
பிரான்ஸ் அரசதலைவர் இம்மானுவேல் மக்ரோன் அந்தநாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளதுடன், பொதுத்தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல்களில் தனது கட்சி பின்னடைவான முடிவுகளை சந்தித்ததை அடுத்து ஒரு விரைவான தேர்தளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மரைன்லு பென்னின் தீவிர வலதுசாரி தேசியப் பேரணிக் கட்சி பிரான்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்குகளில் சுமார் 32 வீத வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது மக்ரோனின் மையவாத, ஐரோப்பிய சார்பு மறுமலர்ச்சிக் கட்சி பெற்றுக்கொண்ட 15 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
‘எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்யமுடியாது எனக் கூறியுள்ள மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் முடிவு தனது அரசாங்கத்துக்கு ‘நல்ல தல்ல’ என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 7ஆம் திகதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அரசதலைவர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். அதேவேளை, பிரான்ஸ் அரசதலைவரின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியம் அளிக்கின்றது என்று அந்நாட்டின் அரசியல் விஞ்ஞானி டொமினிக் மொய்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் இடம் பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசதலைவர் நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். (ச)