உலகம்
Maharashtra Election Results: போராடி வென்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

Maharashtra Election Results: போராடி வென்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர்!
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 187 இடங்களில் வெற்றி, 48 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 42 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. சில தொகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது.
இதில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரத்தை பார்ப்போம்.
கோப்ரி பச்பகடி தொகுதி:
இந்தத் தொகுதியில் ஷிண்டே சிவசேனாவின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போட்டியிட்டார். இவரை எதிர்த்து உத்தவ் சிவசேனாவின் கேதார் பிரகாஷ் திகே போட்டியிட்டார். இதில், ஏக்நாத் ஷிண்டே மொத்தம் 1,59,060 வாக்குகளை பெற்றார். கேதார் பிரகாஷ் மொத்தம் 38,343 வாக்குகளை பெற்றார். இதன் மூலம், ஏக்நாத் ஷிண்டே 1,20,717 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சகோலி தொகுதி:
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவரான நானா படோல் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அவினாஷ் ஆனந்த் ராவ் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் நானா படோலுக்கும் அவினாஷுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 28 சுற்றுக்கள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் 28 வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது.
இதில் நானா படோலுக்கும் அவினாஷுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அதாவது நானா படோல் 96,795 வாக்குகளும், அவினாஷ் 96,587 வாக்குகளும் பெற்றுள்ளனர். நானா படோல் வெறும் 208 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தென்மேற்கு நாக்பூர் தொகுதி:
இந்தத் தொகுதியில் பாஜக தலைவரும், தற்போதைய துணை முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் பிரஃபுல்லா வினோத் ராவ் போட்டியிட்டார். இதில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மொத்தம் 1,29,401 வாக்குகளையும், பிரஃபுல்லா 89,691 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், தேவேந்திர ஃபட்னாவிஸ் 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!
வோர்லி தொகுதி:
உத்தவ் சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஷிண்டே சிவசேனா சார்பில் மிலிந்தா முரளி போட்டியிட்டார். இதில், ஆதித்யா தாக்கரே மொத்தம் 63,324 வாக்குகளையும், மிலிந்தா மொத்தம் 54,523 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், வோர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாராமதி தொகுதி:
இந்தத் தொகுதியில் சரத்பவார் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸின் தலைவர் அஜித் பவார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சரத்பவார் அணியின் யுகேந்திர ஸ்ரீநீவாச பவார் போட்டியிட்டார். இதில் அஜித் பவார் மொத்தம் 1,81,132 வாக்குகளையும், யுகேந்திர ஸ்ரீநீவாச பவார் மொத்தம் 80,233 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம், பாராமதி தொகுதியில் அஜித் பவார் 1,00,899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.