விளையாட்டு
இந்தியாவுக்கு குட் நியூஸ்… 3-வது டெஸ்ட் தோல்விக்கு காரணமாக இருந்த இங்கி., பவுலர் விலகல்!

இந்தியாவுக்கு குட் நியூஸ்… 3-வது டெஸ்ட் தோல்விக்கு காரணமாக இருந்த இங்கி., பவுலர் விலகல்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் மட்டும் எடுத்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 33 ரன்களுடன் களத்தில் இருக்க இந்தியா வெற்றி பெற 135 ரன்கள் தேவைபட்டது. இதையடுத்து, நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராகுல் 6 ரன் மட்டுமே எடுத்து 39 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பண்ட் விக்கெட்டுக்குப் பிறகு களம் புகுந்த ஜடேஜா தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், அவருக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் டக்-அவுட், நிதீஷ் குமார் ரெட்டி 13 ரன் என அவுட் ஆகினர். ஆனாலும், லோ-ஆடரில் களமாடிய ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து கிட்டத்தட்ட 30 ஓவர்களுக்கு மேல் ரவீந்திர ஜடேஜா மட்டையை சுழற்றி வந்தார். பெரிய ஷாட் ஆடப் போய் பும்ரா ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த முகமது சிராஜ் ரன் சேர்க்க திணறினாலும் ஜடேஜாவுடன் தோள் கொடுத்து ஸ்ட்ரைக்கை சுழற்ற உதவி வந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது அவர் பெரிய தப்பை செய்து விட்டார்.ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீச்சு, சுழல் என மாறி மாறி பவுலர்களை கட்டவிழ்த்து தாக்குதல் தொடுக்க, அதனை ஜடேஜா திறம்பட சமாளித்தார். ஆனால், சிராஜ் சற்று திணறினார். குறிப்பாக, ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து குறைந்த அளவு பவுன்ஸ் ஆகி சிராஜின் கையை பதம் பார்த்தது. கடும் வலியில் துடித்துப் போன அவர் பிசியோவின் உதவிக்குப் பிறகு, மீண்டும் ஸ்ட்ரைக் ஆட வந்தார். அடுத்த ஓவர் வந்த ஷோயப் பஷீர் சிராஜ் பேட் ஆடும் போது, அவுட்சைடு ஆஃப் போட்டு அவருக்கு குடைச்சல் கொடுத்தார். ஒருபக்கம் கையில் வலி இருக்க பந்தை விரட்ட சிராஜும் திணறினார். 74.5-வது ஓவரில் பஷீர் போட்ட பந்து சுழன்று சிராஜின் லெக் ஸ்டெம்பை தாக்கியது. அப்போது ஸ்டெம்ப் ஆட்டம் கண்ட நிலையில், பெயில் கீழே விழுந்தது. இதனால் அவர் 4 ரன்னுக்கு அவுட் ஆனார். சிராஜின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேலும், தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஷோயப் பஷீர் விலகல் இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷோயப் பஷீரை வீரர்கள் அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இந்தப் போட்டியில் மொத்தமாக 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருந்தார். இந்த நிலையில், இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியாக, 3-வது டெஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ஷோயப் பஷீர் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஷோயப் பஷீர் நீக்கப்பட்டார் என்றும், இந்த வார இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.”இங்கிலாந்து ஆண்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீரின் இடது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான ரோத்சே டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த வார இறுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. அடுத்த சில நாட்களில் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்டுக்கான அணியை இங்கிலாந்து அறிவிக்கும்,” என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.லார்ட்ஸ் டெஸ்டின் மூன்றாவது நாளில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்து வீசும்போது பஷீரின் இடது கையின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. பஷீர் வீசிய பந்தை ஜடேஜா நேராக அதிரடியான லோ டிரைவ் அடித்தார். அதனை மறைக்க முயன்றபோது பஷீருக்கு காயம் ஏற்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 5.5 ஓவர்கள் மட்டுமே வீசி அவர், இந்தியாவின் சேசிங்கை முடிவுக்குக் கொண்டுவந்த பெருமையைப் பெற்றார். மேலும், கடைசி பேட்டர் முகமது சிராஜின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற உதவினார் என்பது குறிபிடத்தக்கது.