பொழுதுபோக்கு
15 வருட சண்டை, இந்த ஆளு கூட படம் பண்ணவே கூடாதுனு நினைச்சேன்; பாண்டிராஜ் பற்றி விஜய் சேதுபதி ஓபன் டாக்!

15 வருட சண்டை, இந்த ஆளு கூட படம் பண்ணவே கூடாதுனு நினைச்சேன்; பாண்டிராஜ் பற்றி விஜய் சேதுபதி ஓபன் டாக்!
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தொடங்கி, படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, விஜய் சேதுபதியும், பாண்டிராஜும் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இருவரும் இணைந்து பணியாற்றக் கூடாது என்ற முடிவில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.அதன்படி, “சண்டையில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்று கூறுவார்கள். அந்த வகையில், சுமார் 15 ஆண்டுகளாக எனக்கும், இயக்குநர் பாண்டிராஜுக்கும் இடையே இருந்த சண்டை இப்போது தான் ‘தலைவன் தலைவி’ படத்தின் மூலம் காதலாக மலர்ந்திருக்கிறது.ஒரு முறை கதை சொல்லலாமா என்று பாண்டிராஜ் என்னிடம் கேட்டார். அப்போது, 2 பேருக்கும் செட்டாகாது; சேர்ந்து வேலை செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டேன். இந்த படத்தில் பணியாற்ற தொடங்கிய போது, படப்பிடிப்பு தளத்தில் நிச்சயம் சண்டை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், படப்படிப்பு சிறப்பாக நடைபெற்றது.படத்தயாரிப்பாளரின் பணத்தை கொஞ்சம் கூட அதிகமாக செலவு செய்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் படத்தை அவ்வளவு திட்டமிட்டு எடுக்கும் ஆற்றல் பாண்டிராஜுக்கு இருக்கிறது” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.இதேபோல், விஜய் சேதுபதி குறித்து இயக்குநர் பாண்டிராஜும் தனது அனுபவத்தை கூறியுள்ளார். அந்த வகையில், “பசங்க படத்தின் ஒளிப்பதிவாளராக 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் பணியாற்றினார். அப்போது, பிரேம் தான் விஜய் சேதுபதியை அழைத்து வந்தார். ஆனால், அப்படத்திற்கு விஜய் சேதுபதி செட்டாக மாட்டார் என்று கூறி அனுப்பி விட்டேன்.எனினும், தனக்கு பதிலாக நடிகர் விமலை அந்த பாத்திரத்திற்காக விஜய் சேதுபதி அனுப்பி வைத்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த வாய்ப்பை மற்றொரு நபருக்கு கிடைக்கச் செய்யும் ஒரு நல்ல குணம் விஜய் சேதுபதிக்கு இருக்கிறது” என்று பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.