இலங்கை
செம்மணி புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 21 திகதி மீண்டும் ஆரம்பம்!

செம்மணி புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 21 திகதி மீண்டும் ஆரம்பம்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்;
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.
மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ் 25 ,எஸ் 48 , எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது.
அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார்.
ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – என்றார்.
குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை