இந்தியா
கர்நாடகாவில் போலீஸ் ஜீப் டயர் வெடித்து விபத்து: 26 வயது ஐ.பி.எஸ் அதிகாரி பலி

கர்நாடகாவில் போலீஸ் ஜீப் டயர் வெடித்து விபத்து: 26 வயது ஐ.பி.எஸ் அதிகாரி பலி
கர்நாடகாவில் 26 வயதான பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹாசன் பகுதியில் வேலைக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஹர்ஷ் பர்தன், கர்நாடகா கேடர் அதிகாரியாக இருந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பர்தன் மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சியில் பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை, அவர் ஹாசன் பகுதிக்கு வழக்கம் போல் போலீஸ் ஜீப்பில் பணிக்கு சென்றார். டிரைவர் ஜீப்பை ஓட்டியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக வழியில் ஜீப்பின் டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷ் பர்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டின் (SDM) மகன் பர்தன். இவர் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். ஐ.பி.எஸ் படித்த அவர் மைசூரில் நான்கு வார படிப்பை முடித்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஹாசனில் பயிற்சி எடுக்க இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.