Connect with us

இந்தியா

புதுவை திஷா கமிட்டி கூட்டம்; தலைமைச் செயலாளர், அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Published

on

pdy mla walkout

Loading

புதுவை திஷா கமிட்டி கூட்டம்; தலைமைச் செயலாளர், அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

காங்கிரஸ் எம்.பி தலைமையில் நடந்த திஷா கமிட்டி கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை அதிகாரிகள் வராததை கண்டித்து திஷா கமிட்டி கூட்டத்தில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாவட்ட அளவிலான மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் துறை வாரியாக திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (16.07.2025) காலை நடந்தது.திஷா கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி,  சம்பத், காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன், என். ஆர். காங்கிரஸ் உறுப்பினர் ஏகேடி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நில அளவை பதிவேடுகள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை ஆகிய ஐந்து துறைகளில் ஒன்றிய அரசின் நிதியுதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது தலைமைச் செயலாளர் சரத் சவுகான் வரவில்லை. அவருக்கு அழைப்பு விட்டீர்களா என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா கேட்டதற்கு பதில் தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை திருப்பி அனுப்பியது, கழிவறை பணிகள் மோசமாக நடந்தது என வரிசையாக திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பதில் தரப்படவில்லை. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எதுவும் முழுமையடையாத நிலை உள்ளது. மேலும், இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை நடைபெறுவதில்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் கொடுக்கப்படும் கடனுதவிகள் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே செல்கிறது. ஆனால் ஐந்து துறைகள் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, திட்டங்களை செயல்படுத்திய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றால் தான் அது குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற முடியும். தலைமைச் செயலாளர் பங்கேற்கவில்லை. அதைவிடுத்து சம்பந்தமில்லாத அதிகாரிகளை கொண்டு கூட்டம் நடத்துவது என்பது கண்துடைப்பாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். துறை சம்பந்தமாக பதில் அளிக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்” என்றார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன