இலங்கை
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ; இலங்கை தெங்கு ஏற்றுமதி துறைக்கு கடும் பாதிப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ; இலங்கை தெங்கு ஏற்றுமதி துறைக்கு கடும் பாதிப்பு
2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தெங்கு கைத்தொழில் மூலம் ஆண்டுக்கு 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை தற்போது பெற்றுக்கொள்கிறது.
தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான இலங்கையின் ஒற்றை பாரிய இறக்குமதியாளராக அமெரிக்காவே விளங்குகிறது.
இதன்படி ஆண்டுக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகளை இலங்கை மேற்கொள்கிறது.
இந்தநிலையில், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கையின் விலை போட்டித் தன்மையை அழித்துவிடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற போட்டி ஏற்றுமதியாளர்கள் சலுகையை அனுபவிக்கும் நிலையில், இலங்கை தயாரிப்புகள் உலகளவில் புகழ்பெற்ற தரம் இருந்தபோதிலும், வரியினால் ஏற்படும் அதிக விலை காரணமாக மட்டுமே புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.
இது இலங்கை கடினமாக உழைத்துக் கட்டியெழுப்பிய ஒரு முழு தொழில்துறைக்கும் ஒரு பேரழிவு தரும் அடியாகும் என்று இலங்கை தெங்கு தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 800,000 இலங்கையர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறைகளில் 150,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் இப்போது உடனடி அச்சுறுத்தலில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.