பொழுதுபோக்கு
சிகரெட் பிடிக்க தெரியாது, அவமானமா போச்சு ; 300 தீக்குச்சி பற்ற வைத்து கத்துக்கிட்டேன்: சூர்யா த்ரோபேக்!

சிகரெட் பிடிக்க தெரியாது, அவமானமா போச்சு ; 300 தீக்குச்சி பற்ற வைத்து கத்துக்கிட்டேன்: சூர்யா த்ரோபேக்!
‘நந்தா’ திரைப்படத்தின் போது தனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலாவின் திரைப் பயணத்தை போற்றும் விதமாக பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இந்த தகவலை சூர்யா பகிர்ந்து கொண்டார்.சினிமா துறையில் நுழைந்த போது பல விமர்சனங்களை சந்தித்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். சரியாக நடிக்கத் தெரியவில்லை, டான்ஸ் ஆட வரவில்லை என்று எண்ணற்ற விமர்சனங்கள் சூர்யா மீது வைக்கப்பட்டன. இந்த அனைத்து விமர்சனங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மிக விரைவாக, தன்னுடைய திறமையை சூர்யா நிரூபித்தார். இதற்கு ‘நந்தா’ திரைப்படம் சூர்யாவிற்கு உதவியாக அமைந்தது. பாலாவின் இயக்கத்தில், தனது மாறுபட்ட நடிப்பை சூர்யா வெளிப்படுத்தினார். மேலும், இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், ‘நந்தா’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவம் மற்றும் அதனால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சூர்யா மனம் திறந்து கூறியுள்ளார். அதன்படி, “பாலா இயக்கத்தில் ‘நந்தா’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு காட்சியை மொட்டை மாடியில் படமாக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம், நான் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், எப்படி சிகரெட் பிடிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் எனக்கு தெரியாது.சிகரெட் பிடிக்கத் தெரியாது என்று மற்றவர்கள் முன்னிலையில் சொல்லவும் எனக்கு தயக்கமாக இருந்தது. ஏனெனில், காட்சியை படமாக்க அனைவரும் பணியாற்றி இருந்தனர். இதற்காக சுமார் 5, 6 டேக்குகளுக்கு மேல் சென்று விட்டது. அப்போதைய சூழலில், ‘நந்தா’ எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதனால், சிகரெட் பிடிக்க தெரியவில்லை என்று கூற எனக்கு அவமானமாக இருந்தது. எனினும், ஒரு கட்டத்தில் கூறிவிட்டேன். அதன் பின்னர், மொத்த யூனிட்டும் மொட்டை மாடியில் இருந்து இறங்கி அடுத்த ஷாட்டை படமாக்க ஆயத்தமாகினர். இந்த சம்பவத்தை மிகுந்த அவமானமாக உணர்ந்தேன். தீப்பெட்டியில் ஏறத்தாழ 100 குச்சிகள் இருக்கும் என்று நினைக்கிறேன். சுமார் 300 குச்சிகளை பற்ற வைத்து சிகரெட் எப்படி பிடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். இப்போது, அது ரோலக்ஸ் கதாபாத்திரம் வரை பயன்படுகிறது” என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.